வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கோரி பிரம்மாண்ட பேரணி
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி இந்துக்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பறனர்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5ம் திகதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, அங்கு முகமது யூனஸ் தலைமையில் இடக்கால அரசு அமைந்தது. எனினும், அங்குள்ள இந்துக்களின் வீடுகள், கடைகள், கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. துர்கா பூஜாயின்போதும் இந்தத் தாக்குதல் தொடர்ந்தது.
இந்நிலையில், சனாதன் ஜக்ரன் மஞ்ச் சார்பில் சிட்டகாங் நகரில் உள்ள லால்டிகி மைதானத்தில் நேற்று முன்தினம் மாபெரும் பேரணி நடைபெற்றது. சிறுபான்மையினருக்கு உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் நடைபெற்ற இந்தப் பேரணியில் பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் பங்கேற்றனர்.
சனாதன் ஜக்ரன் மஞ்ச் அமைப்பினர் வங்கதேச அரசுக்கு 8 கோரிக்கைகளை வைத்துள்ளனர். இவற்றை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
*சிறுபான்மையினர்களுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபட்டவர்களிடம் விரைவாக விசாரணை நடத்த தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்.
*வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
*சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டம் உடனடியாக இயற்ற வேண்டும்.
*சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் உருவாக்க வேண்டும்.
*கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் சிறுபான்மையினருக்காக பிரார்த்தனை அரங்குகளை கட்ட வேண்டும்.
*இந்து பவுத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நல வாரியங்கள் அறக்கட்டளைகளாக மாற்றப்பட வேண்டும்.
*துர்கா பூஜைக்காக 5 நாள் விடுமுறை அளிக்க வேண்டும்.
*சம்ஸ்கிருதம் மற்றும் பாலி கல்வி வாரியங்களை நவீனமயமாக்க வேண்டும். இத்தகைய கோரிக்கைகள அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்தப் போராட்டம் தொடர்பான வீடியோவை வங்கதேச எழுத்தாளரும் நாடு கடந்து வசித்து வருபவருமான தஸ்லிமா நஸ்ரின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.இதனிடையே, வங்கதேசத்தில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமி உள் ளிட்ட அடிப்படைவாத அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள், இந்துக்கள் போராட்டத்தில் ஈடு படக்கூடாது என்றும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது இந்துக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது