வீட்டிற்குள் புகுந்த மழைநீர் பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நேற்று மாலை பெய்த கன மழையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெளியேறாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 10வது வார்டு பகுதியில் சாத்தான்குட்டை தெரு, வெள்ளகுளம் தெரு ஆகிய பகுதிகள் தாழ்வான பகுதியாக உள்ளதால் அனைத்து தெருக்களில் இருந்தும் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் வழியாக காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய பிரதான கால்வாயான மஞ்சள் நீர் கால்வாய் வழியாக மழை நீர் சென்று வடிய தொடங்குகிறது.
இந்நிலையில் சாத்தான்கோட்டை தெரு பகுதியில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கி அவை வெளியேற முடியாததால் மாநகராட்சி பணியாளர்கள் தற்காலிக நடவடிக்கை எடுத்து மழை நீர் கால்வாயை ஆங்காங்கே திறக்கப்பட்டு நீண்ட நேரங்களுக்கு பிறகு மழைநீர் வடிந்தன.
இவற்றால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தனர்.
மேலும் மழைநீரானது வெள்ளகுளம் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தவெளி அம்மன் கோவில் முழுவதும் நீர் சூழ்ந்து வெளியேற முடியாத நிலையில் மோட்டார் பம்ப் வைத்து மாநகராட்சி ஊழியர்கள் நீரினை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மழை நீர் வடியும் கால்வாய்களை பார்வையிட்டு ஆகிரமிப்பு பகுதிகளை உடனடியாக வெளியேற்றி கால்வாயின் முழு அளவை சீர்படுத்தி இனிமேல் வரும் மழைக்காலங்களில் இது போன்ற மிகப்பெரிய நீர் தேக்கம் ஏற்படாத வகையில் கால்வாய்களை சீர் செய்ய வேண்டும் என மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் தெரிவித்தனர்.
அதன்படி மாநகராட்சி பொறியாளர்கள் அப்பகுதியில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் கால்வாய் சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி உடனடியாக சரிசெய்து தருவதாக உறுதியளித்தனர்.
இவற்றால் அப்பகுதி மக்கள் தங்களுக்கு மழை காலங்களில் நீர் தேங்கா வண்ணம் தற்காலிக நடவடிக்கைகளுக்கு பதிலாக நிரந்தர நடவடிக்கை மேற்கொண்டு எப்போதும் எங்கள் பகுதியில் மழை நீர் தேங்கா வண்ணம் பாதுகாக்கும் வழிவகை செய்யுமாறு பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தனர்