ஊடகவியலாளர்களின் கேள்விக்கு மழுப்பலாக பதில் கூறிய வைத்தியர் அர்ச்சுனா
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் , ஊடகவியலாளர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் வழங்காது, சம்பந்தமில்லாத பதில்களை வைத்தியர் அர்ச்சுனா வழங்கி இருந்தார்.
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவின் சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுகம் யாழில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,
கடந்த 05 மாதங்களுக்கு முன்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல்கள் , இலஞ்சம் வாங்குதல் , துஸ்பிரயோகம் , மோசடிகள் என பலவற்றை சமூக ஊடங்கள் ஊடாக வெளிப்படுத்தி இருந்தீர்கள்.
அது தொடர்பில் நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன ? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு, “தற்போது இதற்கு பதில் வழங்க முடியாது. சில காலத்தில் பதில் சொல்லுவோம் நீங்கள் மறந்தாலும் உங்கள் வீடு தேடி வந்து சொல்லுவேன்” என பதில் கூறினார்.
இதுவரையில் நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை.
அதேவேளை ஆதாரங்களை வைத்துக்கொண்டு , முறைப்பாடுகளை மேற்கொள்ளவோ , மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காது இருக்க காரணம் என்ன ? என கேட்ட போதும்,
அதற்கு பதில் கூறாது, நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். இனிவரும் காலங்களில் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.