BANvsIND T20 – எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி
வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து, வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் 19.5 ஓவர்கள் முடிவில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இந்திய அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டும் மயங்க் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 16 ரன் எடுத்தார். சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் தலா 29 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து இறங்கிய நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்ட்யா ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், இந்தியா 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பாண்ட்யா 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.