27வது மாடியில் இருந்து விழுந்த 3 வயது குழந்தை.. இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் மூன்று வயது பெண் குழந்தை 27வது மாடியில் இருந்து தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டா கார் சிட்டியில் அப்பார்ட்மென்ட் உள்ளது. ஒரு தம்பதி தங்களின் மூன்று வயது பெண் குழந்தையுடன் 27வது மாடியில் வசித்து வருகின்றனர். நேற்று குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்துள்ளது. நண்பகல் 12.30 மணியளவில் பால்கனி அருகே விளையாடும்போது, குழந்தை திடீரென்று தவறி கீழே விழுந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அம்மா அதிர்ச்சியடைந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தை 12வது மாடி பால்கனியில் விழுந்துவிட்டது. இதனால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டு, அந்த வீட்டுக்காரர் குழந்தையை தூக்கி சமதானப்படுத்தியுள்ளார். தொடர்ந்து குழந்தையின் அம்மாவும் அங்கு சென்றுள்ளார். இதையடுத்து குழந்தை உடனடியாக அருகில் உள்ள சர்வோதயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது குழந்தையின் உடல்நிலை சற்று மோசமாக தான் இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து குழந்தை மீளவில்லை. இருப்பினும் தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. குழந்தையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பால்கனியில் அழுது கொண்டிருக்கும் குழந்தையை ஒருவர் தூக்கி செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் அம்மா கவனக் குறைவாக இருந்ததே சம்பவத்துக்கு காரணம் என்று ஒரு தரப்பில் குற்றம் சாட்டினர். மறுதரப்பில், நொய்டாவில் ஏராளமான அப்பார்ட்மென்ட்கள் உள்ளன. ஆனால் அங்கு போதிய பாதுகாப்பு இல்லை. எனவே, அங்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் மற்றும் வீடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் இது எதார்த்தமாக நடைபெற்ற விபத்து என்பதால், வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.