ஈரான் பதிலடி கொடுத்தது – இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரித்த சிறிது நேரத்திலேயே ஈரானின் இந்த எதிர்பாராத பதில் வந்துள்ளது.
ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் இராணுவமே உறுதி செய்துள்ளது. பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.
சில இடங்களில் தாக்குதல் நிறுத்தப்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதை ஈரானின் புரட்சிப் படையும் உறுதி செய்துள்ளது.
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா மற்றும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஆகியோர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதலை அடுத்து இஸ்ரேலில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன. டெல் அவிவ் நகரில் பாதுகாப்பு அமைச்சரவை அவசர கூட்டத்தை நடத்துகிறது.
பதிலடி கொடுத்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டார்.
ஈரான் எந்த தாக்குதல் நடத்தினாலும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஹெஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்ததை அடுத்து ஈரானின் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதேவேளை, டெல் அவிவ், யாஃபாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
ஈரானின் தாக்குதலுக்கு எதிராக பாதுகாக்கவும், இஸ்ரேலுக்கு உதவவும், பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தை பாதுகாக்கவும் தயாராகி வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை காலை தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் சிறிது தூரம் நுழைந்தது.
இராணுவ நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டது, உள்ளூர்மயமாக்கப்பட்டது மற்றும் சில மையங்களை இலக்காகக் கொண்டது என்ற விளக்கத்துடன் தரைப் போர் லெபனானில் ஒரு புதிய முன்னணியைத் திறந்தது.
இதன் ஒரு பகுதியாக தெற்கு பெய்ரூட்டில் உள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த மக்களை வீடுகளை விட்டு வெளியேறி வடக்கு லெபனானுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இஸ்ரேலிய இராணுவம் இன்னும் லெபனான் எல்லையை கடக்கவில்லை என்றும் அவ்வாறு செய்தால் நேரடிப் போருக்குத் தயாராக இருப்பதாகவும் ஹிஸ்புல்லா மீண்டும் வலியுறுத்தினார்.
தரைப் போருடன், செவ்வாயன்று லெபனான் முழுவதும் இஸ்ரேல் பரவலான வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.
தலைநகர் பெய்ரூத்தில் பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. தெற்கு லெபனானின் ஐன் அல்-ஹில்வாவில் ஏராளமான மக்கள் வசிக்கும் பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இங்கு கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
லெபனான் பிரதமர் நஜிப் மெகாதி, ஏற்கனவே 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும், நாடு அதன் வரலாற்றில் மிகவும் ஆபத்தான கட்டங்களை கடந்து வருவதாகவும் கூறினார்.
இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக டெல் அவிவ் மீதும் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது.
ஃபாடி-4 ராக்கெட்டுகள் மொசாட் தலைமையகத்தைத் தாக்கியதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.