இலங்கையில் ரணில் ஆரம்பித்தவற்றையே அனுர செய்கிறார் – முன்னாள் அமைச்சர் தகவல்
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, கடந்த அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்களை மீள முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம், உர மானிய தொகை அதிகரிப்பு மற்றும் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சூரிய படலங்களைப் பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தேர்தல் காரணமாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அவை நிறுத்தப்பட்டன.
எனினும் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், மீண்டும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்களை நிறுத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கிறோம்.
குறிப்பாகக் கடந்த அரசாங்கத்தில் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு திறைசேரியின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டது.
எனினும் தேர்தல்கள் காலப்பகுதியில் குறித்த பணிகளை முன்னெடுக்க வேண்டாமென நிதியமைச்சுக்கும் கடற்றொழில் அமைச்சுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவை நிறுத்தப்படக் கூடாது.
ஜனாதிபதித் தேர்தலின் போது குறித்த நிவாரணங்கள் நிறுத்தப்பட்டமையினால் கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பாதிப்படைந்தனர்.
அவை தொடர்ந்தும் செயற்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.