லெபனானில் நேரலையில் பேசிக் கொண்டிருந்தபோதே ஊடகவியலாளர் வீட்டில் பாய்ந்த இஸ்ரேலிய ஏவுகணை..!
லெபனான் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர், தொலைக்காட்சி நேரலையில் இருந்தபோது, இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று அவரது வீட்டைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார். இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேல் – காஸா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக, ஈரான் ஆதரவுகொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேஜர்களும், வாக்கி-டாக்கிகளும் வெடித்துச் சிதறின. இதில் 39 பேர் பலியானதாகவும், 3,000 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இது, இஸ்ரேல் நடத்திய சதி என லெபனான் அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. இதை, இஸ்ரேல் மறுக்கவும் இல்லை அதேநேரத்தில் அதை உறுதிப்படுத்தவும் இல்லை.
இதற்கிடையே, ”இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம் எனவும், இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம்” எனவும் ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல், தொடர்ந்து லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், இதுவரை 50 குழந்தைகள் உள்பட 558 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1,835 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பதற்றமான சூழ்நிலையில், இதுகுறித்த செய்திகளை லெபனான் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர், தொலைக்காட்சியில் நேரலை செய்துகொண்டிருந்தார்.அப்போது, இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று அவரது வீட்டைத் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்தார். விசாரணையில், அவர் மிராயா இன்டர்நேஷனல் நெட்வொர்க்கின் தலைமை ஆசிரியர் ஃபாடி பௌதயா என தெரிய வந்துள்ளது. அவர் வீட்டில் ஏவுகணை பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பலரும் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக, உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து ஊடகவியலாளர் ஃபாடி பௌதயா தன்னுடைய எக்ஸ் தளத்தில், “என்னை அழைத்து அன்பாய் விசாரித்த அனைவருக்கும் நன்றி. கடவுளுக்கு நன்றி. நான் நலமாக இருக்கிறேன், என்னை ஆசிர்வதித்த கடவுளுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.