இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் – பொலிஸார் தகவல்
இலங்கையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
விகாரைகள், வெசாக் வலயங்கள் உள்ளிட்ட பல்வேறு சமய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் தொடர்பில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெசெக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு பார்வையாளர்களை காண விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களில் கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த இரண்டு நாட்களிலும் கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொதிகள் மற்றும் இனிப்புகளை ஒருவருக்கு மாத்திரம் போதுமான வகையில் வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த காலப்பகுதியில் மதுபானசாலைகளை மூடுவதை ஒழுங்குபடுத்துவதற்கு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலதிக கலால் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்தார்.