மீண்டும் டி20 போட்டிகளில் விளையாடும் ரோஹித் சர்மா? அவரே கொடுத்துள்ள விளக்கம்!
இந்தியாவுக்கான இனி டி20 போட்டிகளில் விளையாடவும், ஓய்வு பெற்ற முடிவை திரும்ப பெரும் எண்ணம் இல்லை என்று ரோஹித் சர்மா மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த முடிவில் தான் நிம்மதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற பிறகு, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வது பெறுவதாக அறிவித்து இருந்தார் ரோஹித் சர்மா. மேலும், தற்போதைய உலக கிரிக்கெட்டில் ‘ஓய்வு’ என்ற வார்த்தை அதன் சாரத்தையும் நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டதாகக் கருதுகிறார்.
ஒரு சில விளையாட்டு வீரர்கள் ஓய்வு என்ற வார்த்தைக்கு எவ்வளவு துரோகம் செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஷாஹித் அப்ரிடி, முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் போன்ற வீரர்களும், மைக்கேல் ஜோர்டான், மைக்கேல் ஃபெல்ப்ஸ், கிம் கிளிஸ்டர்ஸ், டாம் பிராடி போன்ற சீனியர் வீரர்கள் கூட தங்கள் ஓய்வு முடிவை மாற்றி உள்ளனர்.
இதனை மனதில் வைத்து தான் ரோஹித் சர்மா இவ்வாறு பேசியுள்ளார். ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஓய்வு முடிவில் இருந்து மாற்றி கொள்ளவில்லை. 2015 உலகக் கோப்பையில் மைக்கேல் கிளார்க், அதற்கு முன்பு 2014ல் குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தே போன்றோர் தங்கள் முடிவில் தெளிவாக இருந்தனர்.
ரோஹித் சர்மாவை போன்று புகழின் உச்சியில் இருந்த சமயத்தில் இந்திய வீரர்கள் யாரும் ஓய்வை அறிவிக்கவில்லை. 17 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா, அதன் கொண்டாட்டம் முடிவதற்குள் தனது ஓய்வை அறிவித்தார்.
இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 2024 டி20 உலகக்கோப்பை முழுவதும் சிறந்த பார்மில் இருந்தார் ரோஹித் சர்மா. குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிரடி காட்டி இருந்தார்.
“கிரிக்கெட்டில் உலகில் ஓய்வு என்ற வார்த்தை தற்போது நகைச்சுவையாகிவிட்டது. பலரும் ஓய்வை அறிவித்துவிட்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகின்றனர். ஆனால் இந்தியாவில் எந்த வீரரும் இப்படி செய்வதில்லை.
வெளிநாடுகளில் உள்ள சில வீரர்கள் ஓய்வை அறிவித்து அதை மாற்றுகின்றனர். எனவே ஒரு வீரர் ஓய்வு பெற்றாரா இல்லையா என்பது குறித்து என்னால் பேச முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் 159 போட்டிகளில் விளையாடி 140 ஸ்ட்ரைக்-ரேட்டில் 5 சதங்கள் உட்பட 4231 ரன்கள் அடித்துள்ளார். 2007 டி20 உலக கோப்பை அறிமுகமான போது அணியில் இருந்த ரோஹித் சர்மா, 2024ம் ஆண்டுடன் ஓய்வை அறிவித்தார். 2022 டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் கோலி ஆகியோரை மீண்டும் டி20 அணியில் பார்க்க முடியாது என்று ரசிகர்கள் கருதினர்.
பிறகு, 2023 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையில் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தது இந்தியா. இதனை மனதில் வைத்து டி20 உலக கோப்பையை வென்று கொடுத்துவிட்டு ஓய்வை அறிவித்துள்ளார். 2024 டி20 உலக கோப்பையில் 257 ரன்கள் அடித்து, அதிக ரன்கள் அடித்தவர்களில் முன்னணியில் இருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக 92 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். “டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த இதுதான் சரியான நேரம். ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அறிமுகமான உடனே 2007 டி20 உலகக் கோப்பையில் விளையாடினேன். வெற்றி பெற்ற அணியில் நான் இருந்தேன். இப்போது அந்த உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளேன்” என்று ரோஹித் கூறியுள்ளார்.