மும்பை இந்தியன்ஸை விட்டு வெளியேறும் ரோகித்?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2025 தொடருக்கான மெகா ஏலம் நெருங்க நெருங்க, மும்பை இந்தியன்ஸ் வீரரான இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரோகித் கடந்த சீசனின் தொடக்கத்திற்கு முன்னதாக மும்பை அணி நிர்வாகத்தினரால் கேப்டன் பதவியை விட்டு விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். மேலும், வீரராக அவர் தொடரலாம் என்றும் கூறப்பட்டது.
ரோகித் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. இதனால் ரோகித் மற்றும் மும்பை அணிக்கு இடையேயான உறவு மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் புதிய அணியில் சேர ஆர்வமாக உள்ளார். இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவிடம் ரோகித்தின் ஐ.பி.எல் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்டபோது, ரோகித் ஏல முறையில் அல்ல டிரேடு முறையில் புதிய அணிக்கு மாற்றப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஆகாஷ் சோப்ரா, “அவர் இருப்பாரா, போவாரா? என்பது பெரிய கேள்வி. தனிப்பட்ட முறையில் அவர் தொடர்ந்து ஆட மாட்டார் என்று நினைக்கிறேன்.
யாரை தக்கவைத்தாலும் மூன்று வருடங்கள் உங்களுடன் இருப்பேன் என்ற எண்ணத்துடன் இருப்பார். உங்கள் பெயர் எம்.எஸ். தோனி என்றால் அது வேறு. தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் கதை மிகவும் வித்தியாசமானது. ஆனால் ரோகித் சர்மா மும்பைக்கு இந்தியன்ஸில் இருக்கிறார். அவர் வெளியேறலாம் அல்லது எம்.ஐ அவரை கழற்றி விடலாம். என்று நான் நினைக்கிறேன்.
எதுவும் நடக்கலாம். ஆனால் ரோகித் அங்கே தக்கவைக்கப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. என்னிடம் எந்த தகவலும் இல்லை, ஆனால் ரோகித் ஒருவேளை விடுவிக்கப்படுவார் என்று நினைக்கிறேன். அவர் டிரேடு முறையில் ஒரு அணிக்கு செல்லலாம். அதனால், அவர் ஏலத்திற்கு செல்லாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அது நடக்கவில்லை என்றால், அவர் ஏலத்தில் காணப்படுவார். எவ்வாறாயினும், மும்பை இந்தியன்ஸுடனான அவரது பயணம் முடிந்துவிட்டதாக உணர்கிறேன்.” என்று அவர் கூறினார்.