இலங்கை : தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எட்டப்பட்ட இறுதி தீர்மானம்!
தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ இலைக்கு 50 ரூபா கொடுப்பனவும் வழங்குவதற்கு இன்று (10) சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், தோட்ட முதலாளிகள் மற்றும் தோட்டத் தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
அதன்படி இன்று முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தொழிலாளர் ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தொழிலாளர் இராஜாங்க அமைச்சர் திரு.வடிவேல் சுரேஷ், தோட்டத் தொழிலாளி ஒரு நாள் வேலைக்குத் திரும்பினால் EPF மற்றும் ETF உடன் 1,552 ரூபாய் பெற வேண்டும் என்று நாங்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தோம்.
அதாவது EPF மற்றும் ETF இல்லாமல் 1,350 ரூபாய். ஆனால் அது 1,350 மற்றும் எஸ்டேட் தொழிலாளிக்கு அதிக சுமை கொடுக்க முடியாது. தோட்டத் தொழிலாளியின் உழைப்பை மட்டுப்படுத்த முடியாது. அதிகமாக உழைத்தால் அடிப்படைச் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்க முடியும். 350 ரூபாயாக மட்டுப்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி, தொழிலாளர் ஆணையாளர் நாயகம், நாளாந்த குறைந்தபட்ச ஊதியமான 1,000 ரூபாயை 1,700 ரூபாவாக உயர்த்தி அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
பின்னர், குறித்த வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி தோட்ட கம்பனிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தன.
இதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து, உச்ச நீதிமன்றம் ஜூலை 4ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
பின்னர் ஜூலை 24ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 1700 என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது.