இந்தியா – மணிப்பூரில் மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல்
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் செப்டம்பர் 8ஆம் திகதி இரவு ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியும் பழங்குடியினப் பெண்ணும் கொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்குள்ள மக்கள் கொதித்தெழுந்தனர்.
அம்மாநிலத்தின் தலைநகரமான இம்பாலில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காவல்துறையினருடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.வன்முறைச் சம்பவங்கள் காரணமாக செப்டம்பர் 1ஆம் திகதியிலிருந்து 11 பேர் உயிரிழந்து விட்டனர்.
இந்நிலையில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, பழங்குடியினப் பெண் ஆகியோரைக் கொலை செய்தவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.அதுமட்டுமல்லாது, காவல்துறை உயரதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.இதனால் பலர் காயமடைந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மாணவர்கள் காவல்துறையினரை நோக்கி கற்களை எறிந்தனர்.இதில் காவல்துறையினருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் காயங்கள் ஏற்பட்டன.
இதற்கிடையே, ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி லிம்கோலால் மாட்டேயின் உடல் கண்டெடுக்கப்பட்டதை மணிப்பூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.அவர் பலரால் அடித்துக்கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது