வெள்ளத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
வடகொரியாவில் இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறினார்கள் என தெரிவித்து 30அரச அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுமாறு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாண்டு ஜூலை மாதப் பிற்பகுதியில் வடகொரியாவின் வடபகுதியைப் புரட்டிப் போட்ட வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, வெள்ளத்தையும் அதனால் ஏற்பட்ட சேதங்களையும் தடுக்கத் தவறியதாகக் கூறி, 20-30 அரசாங்க அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தென்கொரிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜகாங் மாநிலத்தில் சில ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என ‘டிவி சோசுன்’ தொலைக்காட்சிச் செய்தி கூறியது.
இந்நிலையில், வடகொரியாவில் அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து, தென்கொரியாவின் உளவு அமைப்பு நிலைமையை நுணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
முன்னதாக, ஜூலை பிற்பகுதியில் அவசரக் கூட்டத்தைக் கூட்டிய வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், கடமை தவறி, பலர் உயிரிழக்க காரணமாக இருந்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவர் என்று கூறியிருந்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கிம் பார்வையிட்டது தொடர்பான படங்களை வடகொரியா வெளியிட்டது.
கனமழையாலும் வெள்ளத்தாலும் கிட்டத்தட்ட 4,100 வீடுகள் சேசேதடமடைந்துள்ளன.
சாலைகளும் தண்டவாளங்களும் அடித்துச் செல்லப்பட்டன. 3,000 ஹெக்டர் வேளாண் நிலம் பாழானது.
ஏறக்குறைய 5,000 பேர் மீட்கப்பட்டதாக ‘கேசிஎன்ஏ’ ஊடகச் செய்தி தெரிவித்தது.