இந்தியா- மனுக்களை மாலையாக அணிந்து ஆட்சியர் அலுவலகம் முன் உருண்ட நபரால் பரபரப்பு!!
போபால் அருகே ஒருவர் மனுக்களை மாலையாக அணிந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் உருண்டது அவ்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் பிரஜாபதி, தமது ஊரின் பஞ்சாயத்து தலைவர் கன்கர்யா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி ஏராளமான புகார் மனுக்களை அளித்துள்ளார்.
ஆனால் ஏழு ஆண்டுகளாக அவர் தொடர்ந்து புகார் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியபடியே இருந்தார்.அவரது புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.இதனால் எதையாவது செய்து தமது பக்கம் கவனத்தை ஈர்க்க அவர் முயற்சி செய்தார்.
இதையடுத்து தான் அளித்த மனுக்களின் நகல்களை ஒரு மாலை போல தொடுத்தார்.பின்னர், ஆட்சியர் அலுவலகத்திற்கு குறைதீர் நாளில் சென்று உள்ளார்.
ஆட்சியர் அலுவலக வளாக வாசலில் மேல் சட்டையை கழற்றியபடி வந்த அவர், முழங்கையை மடக்கி தவழ்ந்து வந்தார். அவரது கழுத்து முழுவதும் இதுவரை தான் அனுப்பிய அத்தனை மனுக்களையும் ஒரு மாலையாக கட்டி அணிந்து, உருண்டபடியே நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையறிந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து ஆட்சியருககுத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக மறு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அவர் உத்தரவிட்டார்.