டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிராவோ
தற்போது நடைபெற்று வரும் கரிபியன் ப்ரீமியர் லீக் தொடருடன் 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.
40 வயதிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்திவரும் நிலையில், தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த டுவைன் பிராவோ அதிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டு பிரிமியர் லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராவோ, கடந்த ஆண்டு ஓய்வினை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளராக பிராவோ, செயல் பட்டு வருகிறார்.
உலகின் மற்ற அனைத்து 20 ஓவர் தொடரிலிருந்து விலகுவதாக டுவைன் பிராவோ கூறி இருந்தார். இருப்பினும் தனது சொந்த மண்ணான வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் எனப்படும் சிபிஎல் தொடரில் மட்டுமே பிராவோ பங்கேற்று வந்தார். இந்நிலையில் அதிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நேற்று தொடங்கியது. மொத்தம் 34 போட்டிகள் இந்த தொடரில் நடத்தப்பட உள்ளன. அக்டோபர் 7ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் கடந்த 9 ஆண்டுகளாக ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்காக டுவைன் பிராவோ விளையாடி வருகிறார். அந்த அணி 5 முறை கோப்பையை வென்ற போது அணியில் இடம்பெற்றிருந்த பிராவோ, 3 முறை கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்தார்.
இதனால் அவருக்கும் கரீபியன் பிரிமியர் லீக் தொடருக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் ஆழமானதாக உள்ளது. இந்நிலையில் டுவைன் பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த சிபிஎல் சீசன் எனது கடைசி பயணமாக அமையும். எனது கடைசி கரீபியன் பிரிமியர் லீக் தொடரை விளையாடுவதற்கு ஆவலாக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
20 ஓவர் போட்டியில் மிக முக்கியமான ஆட்டக்காரராக பிராவோ பார்க்கப்படுகிறார். 40 வயதாகும் அவர் இதுவரை 578 டி20 போட்டிகளில் விளையாடி 630 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங் மூலம் 6,970 ரன்கள் சேர்த்திருக்கிறார் டுவைன் பிராவோ.