வெனிசுலாவை சேர்ந்த ஒலிம்பிக் சைக்கிள் ஓட்டப்பந்தய வீராங்கனை திடீர் மரணம்
வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர் டேனிலா லாரியல். தடகள வீராங்கனையான இவர் சைக்கிள் ஓட்டப்பந்தய வீரர். இவர் ஒலிம்பிக் போட்டிகளில் 5 முறை பங்கேற்றுள்ளார். டேனிலா லாரியல் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில தினங்களாக டேனிலா வேலைக்கு வரவில்லை. இதையடுத்து வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், லாஸ் வேகாஸ் குடியிருப்புக்கு சென்று அதிகாரிகள் பார்த்துள்ளனர். அங்கு டேனிலா லாரியல் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் டேனிலா உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆகஸ்ட் 11 அன்று உணவு சாப்பிட்டபோது ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலால் டேனிலா லாரியல் இறந்தது தெரிய வந்தது.
அவரது மூச்சுக்குழாயில் காணப்பட்ட திட உணவு எச்சங்களால் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார் என அறிக்கை கூறுகிறது.
டேனிலா லாரியல் மரண செய்தியை வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியது.