ஜேர்மனியின் 49 யூரோக்கள் பயணச்சீட்டு; இதுவரை 3 மில்லியன் சீட்டுகள் விற்பனை
ஜேர்மனி மாதம் ஒன்றிற்கு 49 யூரோக்கள் கட்டணத்தில் புதிய பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது.
இந்நிலையில், 3 மில்லியனுக்கும் அதிகமானோர் அந்த பயணச்சீட்டுகளை வாங்கியுள்ளதாக ஜேர்மன் பொதுப்போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மக்கள் தங்கள் கார்களை வீட்டில் நிறுத்திவிட்டு, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த பயணச்சீட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு, 9 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது ஜேர்மனி. அது நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது, மாதம் ஒன்றிற்கு 49 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு அறிமுகம் செய்யப்படுகிறது. அதாவது, நாளொன்றிற்கு ஒருவருக்கு பயணம் செய்வதற்கு வெறும் 1.58 யூரோக்கள் மட்டுமே செலவாகும்.
இந்த ஒரே பயணச்சீட்டை வைத்து, அதிவேக மற்றும் தொலைதூர ரயில்கள் தவிர்த்து, மற்ற போக்குவரத்து சாதனங்களில், அதாவது, ரயில், பேருந்து மற்றும் ட்ராம்களில் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.