கிழக்கு எல்லை பகுதி ஊடாக தென்கொரியாவுக்குத் தப்பி ஓடிய வடகொரிய ராணுவ வீரர்
வடகொரிய ராணுவ வீரர் ஒருவர் ஆகஸ்ட் 20ஆம் திகதியன்று எல்லையைக் கடந்து தென்கொரியாவுக்குத் தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரியத் தீபகற்பத்தின் கிழக்கு எல்லைப் பகுதியில், ராணுவப் பாதுகாப்பு அதிகம் உள்ள இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தென்கொரிய ராணுவம் கூறியது.
வடகொரியாவிலிருந்து தென்கொரியாவின் கோசியோங் பகுதிக்கு அந்த வடகொரிய ராணுவ வீரர் நுழைந்ததாகவும் அவரைத் தென்கொரிய ராணுவ வீரர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அவர் எல்லையைக் கடந்ததற்கான நோக்கத்தைத் தெரிந்துகொள்ள அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த ராணுவ வீரர் எல்லையைக் கடப்பதற்கு முன்பாகவே அவரது நடமாட்டத்தை தென்கொரிய ராணுவ வீரர்கள் கண்காணித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தென்கொரியாவுக்குத் தப்பி ஓடிய வடகொரிய ராணுவ வீரர் ஸ்டாஃப் சார்ஜன்ட் பதவி வகிப்பவர் என்று அறியப்படுகிறது.