கனடாவில் உள்ள சூடானியர்கள் தங்கள் விசாவை நீட்டித்துக் கொள்ள அனுமதி
சூடானில் வன்முறை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கனடாவில் உள்ள சூடான் மக்கள் தங்கள் விசாவை நீட்டித்துக்கொள்ளலாம் என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனேடிய குடிவரவு அமைச்சர் ஷான் ஃப்ரேசர் சனிக்கிழமை குறித்த தகவலை அறிவித்ததுடன், இது ஏப்ரல் 30ம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், சூடான் மக்கள் தங்கள் விசாவை நீட்டித்துக்கொள்ளலாம் அல்லது பார்வையாளர், மாணவர் அல்லது தற்காலிக பணியாளராக அவர்களின் நிலையை இலவசமாக மாற்றவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றார்.
மட்டுமின்றி தற்காலிகமாக பணியாற்றும் அனுமதியும் அளிக்கப்படுவதால், கனடாவில் இருக்கும் போது சூடான் மக்கள் தங்களுக்கான நிதியாதாரத்தை தேடிக்கொள்ள முடியும் என்றார்.இதனிடையே, சூடானில் இருந்து கனேடிய மக்களை மீட்கும் நடவடிகை நிறுத்தப்படுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே இந்த முடிவு எனவும் அறிவித்துள்ளனர். மேலும் இதுவரை சுமார் 375 கனேடியர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கனடாவுக்கு வருவதற்கான நிரந்தர வதிவிட விசாவின் ஒப்புதலுக்காக கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணத்தை வைத்திருக்க வேண்டிய தேவையையும் தள்ளுபடி செய்வதாக கனேடிய அரசாங்கம் கூறியுள்ளது.சூடான் தலைநகரை கைப்பற்றும் முனைப்பில் பலம் வாய்ந்த துணை ராணுவத்தினர் போராடி வருகின்றனர். அவர்களை எதிர்த்து சூடான் ராணுவம் போரிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.