ராஜஸ்தான் மாநிலத்தில் பாடசாலைக்கு கூர்மையான கருவிகளை எடுத்துச் செல்ல தடை
பள்ளிகளுக்கு கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான கருவிகளை எடுத்துச் செல்ல தடை விதித்து ராஜஸ்தான் கல்வித் துறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
உதய்பூரில் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது வகுப்புத் தோழரை கத்தியால் தாக்கியதைத் தொடர்ந்து, அவர் பலத்த காயமடைந்தார்.
வழிகாட்டுதலின்படி, இதுபோன்ற பொருட்கள் எதுவும் பள்ளிக்கு கொண்டு வரப்படவில்லை என்பதை உறுதி செய்ய ஆசிரியர்கள் மாணவர்களின் பள்ளி பைகளை சரிபார்ப்பார்கள்.
வழிகாட்டுதலை மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து இடைநிலைக் கல்வித் துறை இயக்குநர் ஆஷிஷ் மோடி, குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், பள்ளி வளாகங்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். அங்கு எந்தவிதமான வன்முறையும் நடக்கக்கூடாது. மாணவர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, கல்வித்துறை இந்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
புதிய வழிகாட்டுதல் பள்ளி அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும், மேலும் பிரார்த்தனை கூட்டங்களின் போது மாணவர்களுக்கும் இது குறித்து தெரிவிக்கப்படும்.