மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; பல விமானச் சேவைகள் ரத்து
மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், அனைத்துலக விமான நிறுவனங்கள் சில தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன அல்லது அவ்வட்டார வான்வெளியைத் தவிர்த்து வருகின்றன.
இம்மாதம் 2ஆம் திகதியிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்கள் ஈரானிய வான்வெளியைத் தவிர்த்து, மாற்றுப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன.
இவ்வேளையில், லுஃப்தான்சா, சுவிஸ் ஏர், ஏர் பிரான்ஸ், டிரான்ஸ்ஏவியா பிரான்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கு வட்டாரத்துக்கான விமானச் சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளன.
கிரீசின் ஏஜியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், பெய்ரூட், அம்மான், டெல் அவிவ் ஆகிய நகரங்களுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் ஆகஸ்ட் 19ஆம் திகதிவரை ரத்து செய்வதாக அறிவித்தது.
அல்ஜீரியாவின் ஏர் அல்ஜீரி நிறுவனம், லெபனானுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் அடுத்த அறிவிப்பு வெளியாகும்வரை நிறுத்திவைப்பதாகக் கூறியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனமும் லாட்வியாவின் ஏர்பால்டிக் நிறுவனமும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்று திரும்பும் விமானச் சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.
ஏர் பிரான்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், பிரிட்டனின் ஈஸிஜெட், பின்லாந்தின் பின்ஏர், இத்தாலியின் ஐடிஏ ஏர்வேஸ் போன்றவை இத்தகைய தற்காலிக ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ள மற்ற விமான நிறுவனங்கள்.
ஐரோப்பாவின் ஆகப் பெரிய மலிவுக் கட்டண விமானச் சேவை வழங்கும் ரயன்ஏர் நிறுவனமும் ஆகஸ்ட் 23ஆம் திகதிவரை டெல் அவிவ் நகருக்கான விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.