வங்கதேச தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் ராஜினாமா
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
அரசு வேலை வாய்ப்பில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கோர்ட்டு அனுமதி அளித்ததால் அதை எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதன்பின் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் வங்கதேசத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலகக் கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.
மேலும், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் திரண்டனர். இதையடுத்து அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை தலைமை நீதிபதி ரத்து செய்தார்.
இதனையடுத்து, வங்கதேச ஜனாதிபதி முகமது சஹாபுதீனுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவின் விசுவாசியாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.