இஸ்ரேலில் இருந்து இராஜதந்திரிகளின் பிள்ளைகளை வெளியேற்றும் கனடா..
மத்திய கிழக்கில் போர் மேலும் பரவக்கூடும் என்ற அச்சத்தில், தனது இராஜதந்திரிகளின் குழந்தைகள், பாதுகாவலர்களை அங்கிருந்து வெளியேற்ற கனடா அரசாங்கம் புதன்கிழமை முடிவு செய்துள்ளதாக கனேடியன் பிரஸ் தெரிவித்துள்ளது.
ஈரான், ஹிஸ்புல்லா அமைப்பு உடனான இஸ்ரேலின் மோதல் போக்கு, ஏற்கெனவே பதற்றநிலையிலுள்ள வட்டாரத்தில் எல்லைப் போரை மேலும் பெரிதாக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டிருப்பதுடன், பசி உட்பட மோசமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வட்டாரத்தில் தொடரும் மோதல்கள், கணிக்க முடியாத பாதுகாப்புச் சூழ்நிலையை மேற்கோள் காட்டி, இஸ்ரேலுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு குடிமக்களை கனடா சனிக்கிழமை எச்சரித்தது. காஸா, மேற்குக் கரை பகுதிகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அது அறிவுறுத்தியது.
டெல் அவிவ், பெய்ரூட்டில் உள்ள தூதரகங்களும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய ஆட்சிக்குழுவுக்கான பிரதிநிதித்துவ அலுவலகமும் “முழுமையாக செயல்பாட்டில் உள்ளன. கனேடியர்களுக்கு அத்தியாவசியச் சேவைகளை அவை தொடர்ந்து வழங்கும்,” என்று கனடா அரசாங்கத்தை மேற்கோள் காட்டி, ‘குளோபல் அஃபேர்ஸ் கனடா ‘வின் அறிக்கை குறிப்பிட்டது.