27 ஆண்டு வரலாற்றை காப்பாற்ற இந்திய அணி எடுத்துள்ள அதிரடி முடிவு!
இன்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த போட்டி இந்திய வீரர்களுக்கு மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். காரணம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது. முதல் ஒரு நாள் போட்டி டையில் முடிந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் மிடில் ஆடர் தடுமாறியது. அதன் காரணமாக இலங்கைக்கு 2வது ஒருநாள் போட்டியில் எளிதான வெற்றி கிடைத்தது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் 27 ஆண்டு கால வரலாற்றை இலங்கை மாற்றி அமைக்கும்.
கடைசியாக 1997 ஆம் ஆண்டு தான் இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் தொடரை இலங்கை அணி வெற்றி பெற்று இருந்தது, அதன் பிறகு ஒரு தொடரில் கூட இந்தியாவை அவர்கள் வெற்றி பெறவில்லை. எனவே மூன்றாவது ஒருநாள் போட்டியில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் சற்று கவனமாக விளையாட வேண்டும். மேலும் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும் கௌதம் கம்பீர் தலைமையில் டி20 தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரில் மோசமாக விளையாடி வருகிறது.
1997 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவும் இலங்கையும் 11 இரு தரப்பு ஒரு நாள் தொடர்களில் விளையாடி உள்ளனர், அதில் அனைத்திலும் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளது. டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் மற்றும் விராட் கோலி ஒரு நாள் தொடருக்கான அணியில் இணைந்தனர். ஆனால் இரண்டு போட்டிகளிலும் நட்சத்திர வீரர் விராட் கோலி பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை.
இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் மொத்தமாக 38 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மறுபுறம் ரோகித் சர்மா ஓப்பனிங்கில் அதிரடி காட்டி வருகிறார். இரண்டு போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் மிடில் ஓவர்களில் இந்தியாவை காப்பாற்றும் விராட் கோலியின் விக்கெட் 3வது போட்டியில் இந்தியாவிற்கு முக்கியம். மறுபுறம் ஸ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடினாலும், இலங்கைக்கு எதிராக அவர்களால் ரன்கள் அடிக்க முடியவில்லை.
ஸ்பின்னர்களை சிறப்பாக கையாளும் சிவம் துபேவும் பேட்டிங் ஆர்டரில் மாற்றி மாற்றி இறக்கி விடப்படுவதால் பெரிதாக ரன்கள் அடிக்க முடியவில்லை. முதல் போட்டி டையில் முடிவதற்கு இவரின் பேட்டிங் தான் முக்கியமான காரணமாக இருந்தது. இருப்பினும் அவருக்கு பதில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரியான் பராக் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. காரணம் இலங்கை மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் கை கொடுக்கிறது. நடந்து முடிந்த டி20 தொடரில் ரியான் பராக் சிறப்பாக பந்து வீசி இருந்தார். எனவே கடைசி ஒரு நாள் போட்டியில் அவரை இந்திய அணி பயன்படுத்தப்படும். மேலும் பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இடம்பெற அதிக வாய்ப்புள்ளது
இந்திய அணி: ரோஹித் ஷர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கே எல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமட். சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
இலங்கை அணி: சரித் அசலங்க, பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்க, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்ன, அகில தனஞ்சய, மொஹமட் ஷிராஸ், மஹீஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே.