கிளப் வசந்த உட்பட இருவரை கொன்றவர்கள் இலங்கையை விட்டு தப்பியோட்டம்?
அதுருகிரிய பச்சை குத்தும் மையத்தில் கிளப் வசந்த உட்பட இருவரை சுட்டுக் கொன்ற பாதாள உலக குத்தகைக் கொலையாளிகள் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என விசாரணை குழுக்கள் சந்தேகிக்கின்றன.
அவர்கள் தென் கரையோரத்தில் இழுவை படகில் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பல மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வாடகைக் கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்த பல இடங்களில் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சோதனையிட்ட போதும் அவர்கள் தொடர்பில் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இவ்வாறு திட்டமிட்டு மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்படும் போது, அதில் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல தயார் நிலையிலேயே இதனை மேற்கொள்வதாக இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தாக்குதல் நடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் தப்பிச் சென்றதற்கான சரியான தகவலும் ஆதாரமும் எங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய இரு கொலையாளிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்கள் தாக்குதலை நடத்திய விதம் அதை உறுதிப்படுத்துவதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிளப் வசந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 10 பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
தாக்குதலுக்கு பல்வேறு வழிகளில் உதவிய 07 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், கொலையாளிகள் இருவரையும், திட்டமிட்ட நபர்களையும் இதுவரை கைது செய்யவில்லை.
காஞ்சிபானி இம்ரான், லொக்கு பெட்ட்டி, உனாகூருவே சாந்த மற்றும் ரொட்டம்பே அமில உள்ளிட்ட பாதாள உலகக் குழுவொன்று இந்தத் தாக்குதலை வழிநடத்தியதாக பாதுகாப்புப் படையினர் நம்புகின்றனர்.