கனமழையால் தென்கொரியாவில் வெள்ளம், நிலச்சரிவு ; போக்குவரத்து பாதிப்பு
தென்கொரியாவின் மத்திய பகுதியில் ஜூலை 7ஆம் திகதியிலிருந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது.இதன் காரணமாக ஜூலை 10ஆம் திகதியன்று அந்நாட்டின் தேசிய ரயில் நிறுவனம் சில ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது.
குன்சான் நகரில் ஜூலை 10ஆம் திகதி காலை, ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 100 மில்லிமீட்டர் மழை பதிவானதாக தென்கொரிய வானிலை மையம் தெரிவித்தது.
தென்கொரியாவின் மத்திய பகுதியில் உள்ள பல இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
கனமழை காரணமாக சுவர் ஒன்று இடிந்து விழுந்ததாகவும் அதில் ஒருவர் மாண்டதாகவும் தென்கொரியாவின் உள்துறை அமைச்சு கூறியது.பல வீடுகள், பொதுச் சொத்துகள், சாலைகள், உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்கொரியாவின் அதிவேக ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டபோதிலும் சில பகுதிகளில் அவற்றின் வேகம் குறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.