உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி – சுப்பர் 8 சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்த இங்கிலாந்து
இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் சென். லூசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த குழு 2க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் இங்கிலாந்து மிக இலகுவாக வெற்றி பெற்றது.
பில் சோல்ட், ஜொனி பெயாஸ்டோவ் ஆகிய இருவரும் மேற்கிந்தியத் தீவுகளின் பந்து வீச்சாளர்களை சிதறடித்து இங்கிலாந்தை இலகுவாக வெற்றி பெறச் செய்தனர்.
குழுநிலைப் போட்டிகளின் கடைசிக் கட்டத்தில் தட்டுத்தடுமாறி சுப்பர் 8 சுற்று வாய்ப்பை உறுதிசெய்துகொண்ட நடப்பு சம்பியன் இங்கிலாந்து, சுப்பர் 8 சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
அதேவேளை, முதல் சுற்றில் சி குழுவில் அசத்தி நான்கு போட்டிகளிலும் வெற்றயீட்டிய இணை வரவேற்பு நாடான மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த மண்ணில் இன்று காலை (இலங்கை நேரப்படி) நடைபெற்ற போட்டியில் முதலாவது தோல்வியைத் தழுவியது.
மேலும் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமாகியுள்ள சுப்பர் 8 சுற்றில் முதல் இரண்டு போட்டிகளிலும் துடுப்பாட்ட வீரர்களின் ஆற்றல்கள் வெளிப்பட்டதுடன் தொடரும் போட்டிகளிலும் துடுப்பாட்ட வீரர்கள் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 181 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கைநோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 17.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றி பெற்றது.
பில் சோல்ட், அணித் தலைவர் ஜொஸ் பட்லர் (25) ஆகிய இருவரும் 46 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொத்தனர்.
தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 84 ஓட்டங்களாக இருந்தபோது 11ஆவது ஓவரின் முதல் பந்தில் மொயீன் அலி (13) ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஃபில் சோல்ட், ஜொனி பெயாஸ்டோவ் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
ஃபில் சோல்ட் 47 பந்துகளில் 7 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 87 ஓட்டங்களுடனும் ஜொனி பெயாஸ்டோவ் 26 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 48 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் அண்ட்றே ரசல், ரொஸ்டன் சேஸ் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.
முன்வரிசை வீரர்களின் பொறுப்பு கலந்த திறமையான துடுப்பாட்டமே மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியது.
ப்றெண்டன் கிங், ஜோன்ஸ்டன் சார்ள்ஸ் ஆகிய இருவரும் 40 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது 5ஆவது ஓவரில் ப்றெண்டன் கிங் கடும் உபாதைக்குள்ளாகி 23 ஓட்டங்களுடன் ஓய்வுபெற நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இது மேற்கிந்தியத் தீவுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
எனினும், ஜோன்சன் சார்ள்ஸ் (38), நிக்கலஸ் பூரன் ஆகிய இருவரும் தம்மிடையே 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். (94 – 1 விக்.)
தொடர்ந்து ரோவ்மன் பவலுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 43 ஓட்டங்களைப் பகிர்ந்த நிக்கலஸ் பூரன் 36 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ரோவ்மன் பவல் 17 பந்துகளில் 5 சிக்ஸ்களுடன் 36 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார்.
மத்திய வரிசையில் ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர், ஆதில் ராஷித், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஃபில் சோல்ட்