கொழும்பில் பாதுகாப்பு கமராவில் சிக்கிய 4,500 ஓட்டுநர்களுக்கு அபராதம்
கொழும்பு நகரில் பாதுகாப்பு கமரா அமைப்பு மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 4500க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து துறையின் கமராக்கள் மூலம் பெறப்பட்ட காணொளி ஆதாரங்கள், உரிய குற்றங்களுக்காக சாரதிகளுக்கு அபராதத் தாள்களை வழங்குவதற்காக பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ‘மவ்பிம’ செய்தி வெளியிட்டுள்ளது.
பொரளை சந்தியில் அதிகளவான போக்குவரத்து விதி மீறல்கள் பதிவாகுவதாகவும் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளில் அதிகமானோர் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பஸ் சாரதிகளே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் பொருத்தப்பட்டுள்ள 106 பாதுகாப்பு கமராக்களில் பொரளை, நாரஹேன்பிட்டி உள்ளிட்ட 33 பிரதான சந்திகளில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் விசேட வேலைத்திட்டத்தை பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாதைச் சட்டத்தை மீறுதல், போக்குவரத்து அடையாளங்களை மதிக்காமை, தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துதல், சிக்னல் சிகப்பு விளக்குகளை அலட்சியப்படுத்தாமல் வாகனம் செலுத்துதல் போன்ற போக்குவரத்துச் சட்ட மீறல்கள் சிசிடிவி கமரா மூலம் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் மேல் மாகாணம் முழுவதிலும் உள்ள வீதி அமைப்பில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் பாதுகாப்பு கமராக்கள் பொருத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், ஆரம்ப கட்டமாக நுகேகொடை, பேலியகொட, களனி மற்றும் களனி ஆகிய இடங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.