கலிஃபோர்னியா காட்டுத் தீயில் 12,000 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பு சேதம்
லாஸ் ஏஞ்சலிசின் வடமேற்குப் பகுதியில் மூண்டுள்ள காட்டுத் தீயால் ஜூன் 16ஆம் திகதி 1,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.புகழ்பெற்ற வெளிப்புறக் கேளிக்கைப் பகுதியிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
காட்டுத் தீயால் 12,000 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பு கருகியதாக அதிகாரிகள் கூறினர்.
தீயணைப்பாளர்கள் ஏறக்குறைய 400 பேர், 7 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். தீயில் இரண்டு சதவீதம் மட்டுமே அவர்கள் கட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 15ஆம் திகதி பிற்பகலில் மூண்ட தீ, தென்கிழக்குத் திசையில் பிரமிட் ஏரி வட்டாரத்தை நோக்கிப் பரவுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதையடுத்து, ‘ஹங்ரி வேலி’ கேளிக்கைப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 1,200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயினால் அங்குள்ள இரண்டு கட்டமைப்புகள் சேதமடைந்ததாகத் தெரிகிறது.
அதிக வெப்பநிலை, குறைவான ஈரப்பதம், பலத்த காற்று ஆகியவற்றால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் சிரமத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் கூறினர். ஜூன் 16ஆம் திகதி இரவு வரை இத்தகைய வானிலை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தீ மேலும் பரவாமல் தடுப்பதற்காக விமானங்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்தும் இதர முயற்சிகளையும் தீயணைப்பாளர்கள் மேற்கொள்கின்றனர்.