ஆஸ்திரேலியாவில் பதிவான பறவைக் காய்ச்சலின் முதல் மனித வழக்கு..!
மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்றிய முதல் சம்பவம் ஆஸ்திரேலியாவில் பதிவாகி உள்ளது.
ஒரு குழந்தையிடம் அந்தத் தொற்று காணப்பட்டதாகவும் அக்குழந்தை இந்தியாவில் இருந்தபோது பறவைக் காய்ச்சல் தொற்றி இருக்கலாம் என்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது அந்தக் குழந்தை முழுமையாகக் குணமடைந்துவிட்டது.
தென்கிழக்கு ஆஸ்திரேலிய மாநிலமான விக்டோரியாவின் தலைநகர் மெல்பர்ன் அருகே முட்டைப் பண்ணை ஒன்றில் மாறுபட்ட, விரைந்து தொற்றக்கூடிய கிருமி கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மனிதரிடம் இருந்து மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று விக்டோரியா மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.எனவே பாதிக்கப்பட்ட குழந்தையிடம் இருந்து வேறு எவருக்கும் அந்தக் காய்ச்சல் தொற்றியதற்கான அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
விக்டோரியாவில் கண்டறியப்பட்டது எச்5என்1 கிருமிதான் என்றபோதிலும் அமெரிக்காவில் பரவிய கிருமிக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று சுகாதாரத் துறை தலைமை அதிகாரி டாக்டர் கிளைர் லூக்கர் கூறினார்.
எச்5என்1 என்னும் பறவைக் காய்ச்சல் கிருமி அண்மைய ஆண்டுகளில் உலகின் பலரைத் தொற்றியது. அதனைத் தொடர்ந்து பில்லியன்கணக்கான பறவைகள் கொன்று ஒழிக்கப்பட்டன.