நான்கு ஆண்டுகளின் பின் கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
காலி தவலம பிரதேசத்தில் பெண் ஒருவரின் கொலை தொடர்பிலான மர்மங்கள் நான்கு வருடங்களின் பின்னர் காலி மாவட்ட குற்றப்பிரிவின் விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.
பெண்ணின் கள்ளக்காதலனே அவரை கொன்று உடலை கழிவறை குழியில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.
இதன்படி, நான்கு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் காலி தவலம் ஹல்லகந்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள கழிவறை குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
நிலுஷிகா சந்தமாலி 2020 ஜூன் 6 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரின் தாயார் அந்த நேரத்தில் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தார்.
தனது முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற நிலுஷிகா, தனது இரண்டு குழந்தைகளுடன் “பதல சாந்த” என்ற ஆணுடன் வாழ்ந்து வந்தார், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பிள்ளைகளின் தாயான இவர் காணாமல் போனமை தொடர்பில் அப்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் எவ்வித தகவலையும் வெளிக்கொணர முடியவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காலி பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணாமல் போன பெண்ணின் கள்ளக்காதலனான ஹேனகொடகே சாந்த என்ற 44 வயதுடைய “பதல சாந்த” என்ற நபரை கைது செய்தனர்.
இதன்போது, அவரை அடித்துக் கொன்று உடலை வீட்டின் அருகே உள்ள கழிவறை குழியில் மறைத்து வைத்தது தெரியவந்தது.
குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய “பதல சாந்த”, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு குழந்தைகள் வந்து தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.
அப்போது, குடிபோதையில் இருந்த பதல சாந்த, வீட்டுக்கு வந்து மனைவியை மீண்டும் தாக்கியதாகவும், மறுநாள் காலை துணியொன்றில் உடலை சுற்றி கழிவறை குழியில் போட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், அவர் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று ஒன்றும் தெரியாதது போது அவர்களிடம் மனைவி தொடர்பில் விசாரித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட உடலை நிலுஷிகாவின் சடலம் என குழந்தைகளும் உறவினர்களும் அடையாளம் கண்டுள்ளனர். அப்போது, அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்த்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.