ஓய்வை அறிவிக்க தயாராகும் தோனி?
தோனி ஓய்வை அறிவிக்க போகிறார் என்று கடந்த 4,5 ஆண்டுகளாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் ஒவ்வொரு முறையும் தோனி அதனை மறுத்து அடுத்த ஆண்டு விளையாடுவேன் என்று கூறி வருகிறார்.
இருப்பினும், இந்த ஐபிஎல் 2024 தான் தோனியின் கடைசி ஐபிஎல்லாக இருக்கும் என்று பலராலும் நம்பப்படுகிறது. இதற்கான பல காரணங்கள் உள்ளன.
இந்த ஆண்டு ஐபிஎல் 2024 போட்டி தொடங்குவதற்கு முன்பு தோனி தனது கேப்டன்சியை ருத்ராஜ் கைக்வாடிடம் ஒப்படைத்தார். இது பலருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. மேலும் 2004ல் அறிமுகமானது போது இருந்த ஹேர் ஸ்டைலில் தற்போது உள்ளார்.
இது மட்டும் இன்றி அந்த சமயத்தில் பயன்படுத்திய பேட் ஸ்டிக்கரை தற்போது தனது பேட்டில் ஓட்டியுள்ளார். இதன் மூலம் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவிக்கும் முடிவில் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேசி இருந்த தோனி, சென்னையில் தான் தனது கடைசி டி20 ஆட்டத்தை விளையாடுவேன் என்றும், அதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சிப்பதாக உறுதியளித்தார்.
“எனது கிரிக்கெட்டை நான் எப்போதும் திட்டமிட்டுள்ளேன். நான் கடைசியாக இந்தியாவில் ஒருநாள் போட்டியை எனது சொந்த ஊரான ராஞ்சியில் விளையாடினேன். எனவே எனது கடைசி டி20 சென்னையில் நடக்கும் என்று நம்புகிறேன். அது அடுத்த வருடமா அல்லது ஐந்து வருடமா என்பது எனக்கு தெரியாது” என்று 2021ம் ஆண்டு நடந்த சிஎஸ்கே அணியின் நிகழ்வில் எம்எஸ் தோனி கூறி இருந்தார். ஏற்கனவே காலில் காயத்துடன் போராடி வரும் தோனி கடைசி சில பந்துகளுக்கு மட்டுமே பேட்டிங் வருகிறார். கடந்த ஆண்டு முழங்கால் அறுவை சிகிச்சை செய்து இருந்த தோனி இன்னும் பூரண குணமடையவில்லை.
தோனி சொன்ன வார்த்தைகளின் படி மே 12 அவரின் கடைசி டி20 போட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அன்று தான் சிஎஸ்கே அணி சென்னையில் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது. குவாலிபயர் 2 மற்றும் பைனல் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ள நிலையில், ஒருவேளை சிஎஸ்கே பிளே ஆப்களுக்கு தகுதி பெறவில்லை என்றால் சிஎஸ்கே இந்த சீசனில் சென்னையில் விளையாடும் கடைசி போட்டி இதுவாகத்தான் இருக்கும். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது மற்றும் இன்னும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
அடுத்து குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுடன் விளையாட உள்ளனர். இந்த 3 போட்டியில் கட்டாயம் 2 வெற்றிகள் பெற வேண்டும். இல்லை என்றால் பிளே ஆப் சுற்றை இழக்க வாய்ப்புள்ளது. எனவே தோனியின் கடைசி போட்டி மே 12 தானா என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெர்பாமன்ஸ் தான் முடிவு செய்ய உள்ளது.