காதலியின் வீட்டிற்குச் சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் காதலியை பார்ப்பதற்காக சென்ற நிலையில் காணாமல் போன இளைஞனின் சடலம் மாதம்பே, பனிரெண்டாவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காடு ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி குளியாபிட்டிய, இலுகேன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்படி, தகவல் கிடைத்த பகுதியில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன், குறித்த சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றமையினால், அதற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த சந்தேக நபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், அவரது தாய் மற்றும் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிமடை மற்றும் கப்பெட்டிபொல பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் நிஹால் தல்துவ கூறுகிறார்.
இதன்படி, காணாமல் போன இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் அது எவ்வாறு செய்யப்பட்டது அல்லது சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதவிர, குறித்த இளைஞரை கடத்திய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் நேற்று (06) குளியாப்பிட்டிய நீதிமன்றில் ஆஜராகியதாகவும், கொலையை செய்தவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.