தேசிய கண் வைத்தியசாலையில் சகல சத்திர சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
தேசிய கண் வைத்தியசாலையில் சகல சத்திர சிகிச்சைகளும் உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட சிலருக்கு ஒரு வகை தொற்று இனங்காணப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.
கண் சத்திர சிகிச்சைகள் திடீரென இடை நிறுத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், தேசிய கண் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட சிலருக்கு ஒரு வகை தொற்று இனங்காணப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மருந்துகளின் தாக்கங்களினால் இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவினால் இதுகுறித்த ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.