புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதை நிறுத்துங்கள் : பிரித்தானியாவில் வெடித்த ஆர்ப்பாட்டம்!
தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்காமில் உள்ள பெஸ்ட் வெஸ்டர்ன் ஹோட்டலுக்கு அருகில், புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் முகத்தை மூடிக்கொண்ட பலர் கலந்துகொண்ட நிலையில் அவர்களில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பல ஆர்ப்பாட்டகாரர்களை பொலிஸார் அகற்றியுள்ளனர்.
எதிர்பாளர்கள் நாடு கடத்துவதை நிறுத்துங்கள் என கோஷமிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத குடியேறிகளை கப்பலில் நாடு கடத்துவற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் துரதிஷ்ட வசமாக குறித்த கப்பலில் லெஜியோனெல்லா பக்றீரியா வெடிப்பு ஏற்பட்டதால் அந்நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் டிசம்பரில், கப்பலில் இருந்தவர்களில் ஒருவர் இறந்துவிட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர், அந்த நபர் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஹோட்டல்களில் தங்கவைப்பதன் மூலம் மில்லியன் கணக்கான பவுண்ட் செலவாகுவதாக பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளவர்லி தெரிவித்துள்ளார்.
ஆகவே வரும் ஜுலை மாதம் விமானங்கள் மூலம் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என முன்னதாக ரிஷி சுனக் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.