தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
பொருளாதார, நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுறும் இலங்கை மக்களுக்கு உதவிட முதற்கட்டமாக 40 ஆயிரம் தொன் அரிசி, 500 தொன் பால்மா மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தமிழக அரசின் சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் நடந்த இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மே தின கூட்டத்தில் பேசிய செந்தில் தொண்டமான் இவ்வாறு கூறியுள்ளார்.
மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்த நேரத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
40 லட்சம் குடும்பங்களுக்கு 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 100 மெட்ரிக் தொன் மருந்து, 500 மெட்ரிக் தொன் பால்மா உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நன்றி கூறினார்.