IPL Match 46 – பிரபல ஐதராபாத் அணியை வீழ்த்திய சென்னை
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரரான ரஹானே 9 ரன்களை எடுத்து ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார்.
டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர். மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சிவம் துபே வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் கெய்க்வாட் 54 பந்துகளில் 98 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
போட்டி முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
213 ரன்களை துரத்திய ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா முறையே 13 மற்றும் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் நிதானமாக ஆடினார். இவர் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிதிஷ் குமார், கிளாசன் முறையே 15 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சீரான இடைவெளியில் ஐதராபாத் அணி விக்கெட்டுகளை இழந்தது.
இதன் காரணமாக ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சார்பில் சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே நான்கு விக்கெட்டுகளையும், பத்திரனா மற்றும் முஸ்தாஃபிசுர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.