T20 கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த இந்தோனேசிய வீராங்கனை
மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
இதன் 5-வது ஆட்டம் பாலியில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இந்தோனேசியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய மங்கோலியா 16.4 ஓவர்களில் வெறும் 24 ரன்னில் சுருண்டது.
இதனால் இந்தோனேசியா 127 ரன்கள் வித்தியாசத்தில் தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்தது.
அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைத்த இந்தோனேசியா சுழற்பந்து வீச்சாளர் 17 வயதான ரொமாலியா, 3.2 ஓவர் பந்து வீசி 3 மெய்டனுடன் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.
சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.
இதற்கு முன்பு நெதர்லாந்தின் பிரடெரிக் ஒவர்டிக் 2021-ம் ஆண்டில் பிரான்சுக்கு எதிராக 3 ரன்னுக்கு 7 விக்கெட் எடுத்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.
இதைத் தொடர்ந்து நடந்த கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தோனேசியா அபார வெற்றி பெற்றது. இதில் மங்கோலியா நிர்ணயித்த 52 ரன் இலக்கை இந்தோனேசியா 9.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது.