அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தீவிரமடையும் பாலஸ்தீன ஆரதரவு போராட்டங்கள்
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளார். இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.
காசா மீதான போரை கண்டித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 18ம் திகதி கொலம்பியா பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தீவிரமடைந்து மிகப் பெரிய இயக்கமாக மாறி உள்ளது.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் 133 பேர் கைது செய்யப்பட்டனர்.கனெக்டி கட்டில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் ஹார்வர்ட், எம்.ஐ.டி., மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் யூசி பெர்க்லி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடந்து வருகிறது.பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் சிறிய குடில்களை அமைத்து அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதன் மூலம் மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் தீவிரம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கொலம்பியா பல்கலைக்கழக பொது விவகாரங்களுக்கான துணைத் தலைவர் பென் சாங் கூறும்போது, மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. ஆனால் அவர்கள் வளாக வாழ்க்கையை சீர்குலைக்கவோ அல்லது துன்புறுத்தவோ மிரட்டவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.