இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறும் எரிமலை… நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்!
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணம், ருவாங் தீவில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறி வருகிறது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி, சுமார் 800 பேர் அத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் மனாடோவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ருவாங் தீவில் உள்ள ஒரு எரிமலை, நேற்றிலிருந்து 3 முறைக்கு மேல் வெடித்துள்ளது. இந்த எரிமலை பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்ததாகவும், தற்போது வெடித்துச் சிதறி வருவதாகவும் அந்நாட்டின் எரிமலை கண்காணிப்பு நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் ஆபத்து தணிப்பு மைய அதிகாரி ஹெருனிங்டியாஸ் தேசி பூர்ணமாச்சாரி கூறியதாவது,”எரிமலையின் நெருப்புப் பிளம்பு வெளியேற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து இரண்டாவது உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது வானில் 1.8 கி.மீ. உயரத்துக்கு நெருப்புப் பிளம்புகளை எரிமலை வெளியிட்டு வருகிறது. நாங்கள் இப்பகுதியிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ஏனெனில் எரிமலையில் மேலும் வெடிப்புகள் இருக்க வாய்ப்பு உள்ளது. எரிமலையிலிருந்து நான்கு கி.மீ. சுற்றளவுக்கு யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.”இவ்வாறு அவர் கூறினார்.
அங்கிருந்து வெளியான வீடியோ காட்சிகளில் எரிமலை மலையிலிருந்து லாவா கீழே பாய்வதையும், அங்குள்ள நீரில் அது பிரதிபலிப்பதையும் காட்டுகின்றன. மேலும், எரிமலைக்கு மேலே சாம்பலாக பறப்பதையும் காணமுடிகிறது.
ருவாங் தீவில் சுமார் 800 பேர் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளியேற்றப்பட்டு, தற்போது அருகிலுள்ள தாகுலண்டாங் தீவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். புவியியல் ரீதியாக டெக்டோனிக் தகடுகளின் மேற்பரப்பில் அமைந்துள்ள இந்தோனேசியா அதிக நிலநடுக்கங்களை சந்திக்கும் நாடாகும். இது ‘பசிபிக் நெருப்பு வளையம்’ எனவும் அழைக்கப்படுகிறது.