இலங்கையில் மின்னல் தாக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் மழையுடன் ஏற்படக்கூடிய பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்றிரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மழை பெய்யும் வேளையில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, மின்னல் தாக்கத்துக்கு உள்ளான நபர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட தர தாதி சந்தியா கருணாதாச அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதியை 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஓடும் நீரில் கழுவி பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.