சிங்கப்பூரில் டெலிகிராம் மூலம் நடக்கும் அதிர்ச்சி செயல் – சுற்றிவளைக்கப்பட்ட கும்பல்
சிங்கப்பூரில் டெலிகிராம் செயலி மூலம் போதைப்பொருள் தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதம் 2ஆம் திகதியன்று நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக இன்றைய தினம் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
ஏறத்தாழ 19,000 டொலர் பெறுமதியுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருளில் 333 கிராம் கஞ்சா, 13 கிராம் ஐஸ் என்றும் அழைக்கப்படும் மெத்தம்பேட்டமைன், 5 கிராம் கெட்டமைன், 1 கிராம் ஹெராயின், 42 எரிமின்-5 மாத்திரைகள், இரண்டு எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 65 மின் சிகரெட் ஆகியவை அடங்குவதாக பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெட்ராஹைட்ரோகன்னாபினோல் என்பது கஞ்சாவில் காணப்படும் முக்கிய மனோதத்துவ கலவை ஆகும்.
கைது செய்யப்பட்ட 36 பேரில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய பெண்ணும் 26 வயதுடைய ஆணும் அடங்குவர்.
காம்பஸ்வேல் டிரைவ் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டார். அவரது படுக்கையறையில் இருந்து சுமார் 123 கிராம் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களை அதிகாரிகள் மீட்டனர்.