மஹியங்கனை பிரதேசத்தில் விசித்திர உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்
மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில் மகாவலி பாலத்திற்கு அருகில் இன்று (30) சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளின் உடை அனைவராலும் பேசப்படுகின்றது.
காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை வழக்கமாக மக்கள் பார்க்காத வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு சிறப்பு போக்குவரத்து சோதனை அமுல்படுத்தப்பட்டது.
மஹியங்கனை மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வரும் 240 தொழிற்பயிற்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் “யுக்திய” நடவடிக்கையுடன் இணைந்து போதைப்பொருள் சோதனைகளுக்காக போக்குவரத்தையும் பொதுமக்களையும் சோதனை செய்ய இவ்வாறு ஒன்றிணைந்தனர்.
ரிதிமாலியத்த, எகிரியன் கும்புர, லொக்கலோயா, தம்பான 51 மைல்கல், வெரகந்தோட்டை பாலத்திற்கு அருகில், சொரபொர சந்தி ஆகிய 06 இடங்களில் இந்த சோதனைகள் இடம்பெற்றன.
பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு ஆய்வுகளின் நடைமுறை அனுபவத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.