இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் – சுகாதார பிரிவு எச்சரிக்கை
இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
12 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாவதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிறுவர்களின் முகம் மற்றும் கைகளில் சிறிய கொப்புளங்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நோயின் தாக்கம் மேல் மாகாணத்திலேயே அதிக அளவில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிறுவர்களுக்கு உணவில் சுவை உணர முடியாத நிலை காணப்படலாம் எனவும், அவர்கள் தொடர்ச்சியாக அழக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த வைரஸ் நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டுள்ள சிறுவர்களை மூன்று அல்லது நான்கு நாட்கள் வீட்டிலேயே தங்கவைக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
இந்த வைரஸ் நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமெனவும், அவர்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டார்.