இளம்பெண்ணை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து ஊர்வலம்: இந்தூரில் 4 பெண்கள் கைது!
இந்தூர் கிராமத்தில் இளம்பெண்ணை அடித்து உதைத்து ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக நடத்திச் சென்ற 4 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டம் கவுதம்புராவில் உள்ள சச்சோடா கிராமத்தில் 30வயது பெண்ணை, ஹோலி பண்டிகையையொட்டி அவரது வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து நான்கு பெண்கள் அடித்து உதைத்துள்ளனர். அத்துடன் அந்த பெண்ணின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக நடத்திச் சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சச்சோடா கிராமத்திற்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுனில் மேத்தா இன்று சென்றார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண், தனக்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக, அவரது தாய் வீட்டுக்குச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சுனில் மேத்தா விசாரணை நடத்தினார்.
அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது வீட்டில் இருந்து வெளியே இழுத்துச் சென்று நான்கு பெண்கள், அவரது ஆடைகளை களைந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அந்த பெண் கெஞ்சியும், அவர்கள் அந்த பெண்ணை அடித்து உதைத்து ஊர்வலமாக நடத்திச் சென்றதாகவும் கூறினர். அத்துடன் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த கவுதம்புரா பொலிஸார், இளம்பெண்ணை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து ஊர்வலமாக நடத்திச் சென்ற நான்கு பெண்களை இன்று கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 354-ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 452 (தவறாகத் தடுத்து நிறுத்துதல் மற்றும் தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளம்பெண்ணை நிர்வாணமாக்கி பெண்களே ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் இந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.