வேலைக்கு சென்ற தொழிலாளியை துரத்தி துரத்தி அடித்துக் கொன்ற யானை!
குடகு மாவட்டத்தில் கோபி தோட்டத்துக்கு இன்று வேலைக்குச் சென்ற தொழிலாளியை காட்டு யானை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், குடகு பகுதியில் திரியும் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதி, தோட்டங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்து வருகின்றன. குடகு மாவட்டத்தில் யானைகள் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சில நாட்களுக்கு முன், விராஜ்பேட்டை தாலுகா செனங்கி அருகே உள்ள அப்பூர் கிராமத்தில் கோபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த அஜாபானு(37) பெண் தொழிலாளியை யானை மிதித்துக் கொன்றது. கடந்த 10ம் திகதி மடிக்கேரி அருகே உள்ள சட்டிபிடு கிராமத்தின் நிஷானிபெட்டாவில் வரதா கிராமத்தைச் சேர்ந்த அப்பாச்சா (60) என்பவரை யானை மிதித்து கொன்றது.
இந்த நிலையில், குடகு மாவட்டம், மடிகேரி தாலுகா நாலடி கிராமத்தைச் சேர்ந்த காபி தோட்டத் தொழிலாளி ராஜா தேவய்யா(59) காட்டு யானையால் இன்று அடித்துக் கொல்லப்பட்டார். அவர் காலையில் தோட்டத்திற்குச் சென்ற போது வழிமறித்த காட்டு யானை அவரை துரத்தி துரத்தி அடித்துக் கொன்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் மடிகேரிக்கு விரைந்துள்ளனர். கூட்டமாக திரியும் காட்டுயானைகளை வனத்திற்குள் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை வனத்துறையும், அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று குடகு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.