இலங்கை ஜனாதிபதியின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பொன்றை கூட்டியுள்ளார்.
குறித்த கலந்தரையாடலுக்காக எதிர்க் கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய அழைப்பை ஏற்று அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரை இதில் பங்கேற்க வைக்க தீர்மானித்துள்ளது.
சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் அண்மையில் விடுத்த கோரிக்கையில் இருந்து இந்த முன்முயற்சி உருவாகியுள்ளது.
நாட்டின் மறுசீரமைப்புக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதன் முக்கியமான முக்கியத்துவத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். இதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் கூட்டுப் பொறுப்புக்கூறலின் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்.