ஜேர்மன் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்!
ஜேர்மன் நகரமொன்றில், பள்ளி ஒன்றிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்த நிலையில், அவரிடம் ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்ததைத் தொடர்ந்து பொலிஸார் அங்கு குவிந்தனர்.
நேற்று காலை உள்ளூர் நேரப்படி 7.15 மணியளவில், ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கருகிலுள்ள Brandenburg என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்த நிலையில், அவரிடம் கத்தி ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் இருந்ததைக் கவனித்தவர்கள் பொலிஸாருக்கு தகவலளித்தனர். உடனடியாக பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
பொலிஸார் அவரை சூழ்ந்துகொண்டு மடக்கிப் பிடித்த நிலையில், அவரிடமிருந்தது alarm gun என்னும் எச்சரிக்கை கொடுக்கும் துப்பாக்கி என தெரியவந்தது.
அந்த 22 வயது நபரைக் கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஒருவருக்கும், கைது செய்யப்பட்டவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்தது பள்ளி துவங்கும் நேரத்திற்கு முன் என்பதால், பள்ளியில் மாணவ மாணவிகள் யாரும் இல்லை என்று கூறியுள்ள பொலிஸார், சில ஆசிரியர்கள், சில அலுவலர்கள் மற்றும் தோட்டத்தில் பணியாற்றும் சிலர் மட்டுமே பள்ளி வளாகத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் எதற்காக ஆயுதங்களுடன் பள்ளிக்குள் நுழைந்தார் என்பது தெரியவரவில்லை.