120 அடி தூரத்தை 4.21 நொடிகளில் ஓடி அமெரிக்க வீரர் சாதனை
இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பது போல் அமெரிக்காவில் பிரபலமானது, கால்பந்து விளையாட்டு.
ஆண்டுதோறும் நடைபெறும் “சூப்பர் பவுல்” (Super Bowl) எனப்படும் கால்பந்து போட்டிகள் அமெரிக்கர்களால் விரும்பி பார்க்கப்படும் போட்டித் தொடர் ஆகும்.
ஸ்கவுட்களால், வீரர்களை தேர்வு செய்ய வைக்கப்படும் கடுமையான பரிசோதனைகளில் “40-யார்ட் டேஷ்” (40-yard dash) போட்டியும் ஒன்று.
இந்த தேர்வில் 40 யார்ட் (36.576 மீட்டர்) எனப்படும் 120 அடி தூரத்தை குறைந்த நேரத்தில் வேகமாக ஓட வேண்டும்.
நேற்று, இண்டியானாபொலிஸ் (Indianapolis) நகரில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான 40-யார்ட் டேஷ் தேர்வு போட்டியில் “டெக்சாஸ் லாங்ஹார்ன்ஸ்” (Texas Longhorns) அணி வீரர் சேவியர் வொர்த்தி (Xavier Worthy) 4.21 நொடிகளில் கடந்து புதிய சாதனை புரிந்துள்ளார்.
இந்த சாதனை குறித்து பேசிய வொர்த்தி, “நான் ஒரு பழைய சாதனையை உடைத்து புதிய சாதனையை படைத்துள்ளேன். எனக்கு இது நிஜமா என்பதே தெரியவில்லை.
என் சக வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த சாதனையை படைத்ததை ஒரு ஆசிர்வாதமாக பார்க்கிறேன்” என கூறினார்.
2017ல், “வாஷிங்டன் ஹஸ்கீஸ்” (Washington Huskies) அணியை சேர்ந்த ஜான் ராஸ் (John Ross) என்பவர் 4.22 நொடிகளில் 120 அடி தூரத்தை ஓடியதே இதுவரை சாதனையாக இருந்தது.